150 பள்ளி மாணவர்களின் மேல் நிலை கல்வி கேள்விகுறியானது..! பள்ளியை விட்டு விரட்டும் அவலம்
150 பள்ளி மாணவர்களின் மேல் நிலை கல்வி கேள்விகுறியானது..! பள்ளியை விட்டு விரட்டும் அவலம்
சென்னை எம்.கே.பி நகர் விவேகானந்தா சி.பி.எஸ்.இ பள்ளியில், 10 ஆம் வகுப்புத் தேர்வில் 350 மதிப்பெண்களுக்குக் குறைவாக பெற்ற 150 மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கியதாகப் பள்ளி நிர்வாகம் மீது புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் கல்வியை மேம்படுத்தாத ஆசிரியர்களால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
சென்னை மகாகவி பாரதி நகரில் நர்பதா தேவி ஜெ அகர்வால் விவேகானந்தா வித்யாலயா என்ற சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் கடந்த ஆண்டு 250 பேர் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதில் 500 க்கு 350 மதிப்பெண்ணுக்குக் கீழாக பெற்று தேர்வான மாணவர்கள் 150 பேருக்கு மேல்நிலைக் கல்வியான 11 ஆம் வகுப்புக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதோடு, மாற்றுச் சான்றிதழை வாங்கிக் கொண்டு வேறு பள்ளிகளில் சேர்ந்து கொள்ளுமாறு விரட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இவர்கள் எல்லாம் எல்.கே.ஜி முதல் 10 ஆம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில் தொடர்ந்து படித்து வந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. நீட் தேர்வைக் காரணம் காட்டி இந்த மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கியதாக காரணம் கூறப்படுகின்றது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள விவேகனந்தா பள்ளி நிர்வாகம், நீட் தேர்வு வருவதற்கு முன்பு 10 ஆம் வகுப்பு வரை சி.பிஎஸ்.இ பாடத்திட்டத்தில் படித்துவிட்டு 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கவேண்டும் என்பதற்காக பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர மாற்றுச் சான்றிதழை பெற்று சென்று விடுவதாக தெரிவித்துள்ளது.
இதனால் 11 ஆம் வகுப்பில் அதிக பட்சமாக 120 மாணவர்கள் மட்டுமே படித்து வந்ததாகவும் பள்ளி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். தற்போது நீட்தேர்வு அமலில் இருப்பதால், அதில் தேர்வாக சி.பி.எஸ்.இ கல்விமுறை தேவை என உணர்ந்து தங்கள் பள்ளியிலேயே தொடர்ந்து படிக்க அதிக மாணவர்கள் விரும்பினாலும், அதற்கு ஏற்ப இடவசதி இல்லாததால் கட் அப் மதிப்பெண் வைத்து மாணவர்களை தேர்ந்தெடுப்பதால், மீதமுள்ளவர்கள் வெளியில் செல்லும் நிலை ஏற்படுவதாகவும் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
வேறு ஒரு சி.பி.எஸ்.இ பள்ளிக்குச் சென்று தங்கள் பிள்ளைகளை 11ம் வகுப்பில் சேர்ப்பது சவாலானது மட்டுமல்ல, 10 வருட கற்றலில் அவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்ததற்கு கற்றுக் கொடுத்த விவேகானந்தா பள்ளி ஆசிரியர்களும்தானே காரணம் என பெற்றோர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.
மதிப்பெண் ரேங்க் முறை மாணவர்களை பாதிக்கும் என்று அதனை கைவிட உத்தரவிடப்பட்ட நிலையில், கடிவாளம் இல்லாக் குதிரை போல இஷ்டத்திற்கு கட்டணம் வசூலித்துக் கொண்டு, தேர்ச்சி பெற்ற மாணவர்களை மதிப்பெண்ணை காரணம் காட்டிப் பிரித்து பள்ளியை விட்டு விரட்டுவது எப்படி ஏற்புடையதாக இருக்கும் என்றும் பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.
அதே நேரத்தில், இடமில்லை என்று கூறும் பள்ளி நிர்வாகம், வேறு பள்ளியில் இருந்து அதிக மதிப்பெண்ணுடன் வரும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களை புதிதாக சேர்த்துக் கொள்வதாகக் கூறும் பெற்றோர், விவேகானந்தா பள்ளி நிர்வாகம் தங்களிடம் படிக்கும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதை விட்டுவிட்டு, வேறு பள்ளிகளில் இருந்து நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு இடம் கொடுத்து, தங்கள் பள்ளியில் கல்வி தரமாக இருப்பது போன்று மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயல்வதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த பள்ளிக்கூடம் மட்டுமல்ல, தமிழகத்தில் பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில் இதே சித்து வேலைதான் நடக்கிறது என்றும், நன்றாகப் படிக்கும் மாணவர்களை மட்டும் தங்கள் பள்ளிகளில் வைத்துக் கொண்டு மற்றவர்களை வேறு பள்ளிகளுக்கு அனுப்பி விட்டு, தங்கள் பள்ளி கல்வியில் சிறந்து விளங்குவது போன்ற மாயதோற்றத்தை உருவாக்கி லட்சங்களில் கல்விக் கட்டணம் வசூலிக்க செய்யப்படும் வியாபார யுக்தி என்று கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது போன்ற பள்ளிகள் மீதுள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.