இந்தியா - பாக்., எல்லையில் 20 மீ., நீளம் சுரங்கம் கண்டுபிடிப்பு
ஜம்மு : காஷ்மீர் மாநிலம் ஜம்முவில், இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் வேலிக்கு அடியில் 20 மீ தூரம் கொண்ட சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பயங்கரவாதிகளின் ஊடுருவவும், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தவும், இது சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில், இது போன்று வேறு ஏதும் கட்டமைப்புகள் உள்ளனவா என வீரர்கள் தேடி வருகின்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவலை எதிர்ப்பதில் விழிப்புடன் இருக்குமாறு, பிஎஸ்எப் டிஜிபி இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா உத்தரவிட்டுள்ளார்.
இந்திய எல்லை வேலியில் இருந்து 50 மீ., தொலைவில் உள்ள இந்த சுரங்கபாதையை, நேற்று முன்தினம், ஜம்முவின் சம்பா செக்டார் பகுதியில் பிஎஸ்எப் வீரர்கள் கண்டறிந்தனர். அதனை ஆய்வு செய்த போது, அதன் வாயில் உள்ளே பிளாஸ்டிக் மணல் மூட்டைகளில் பாகிஸ்தான் அடையாளங்களாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சுரங்கப்பாதையை முழுவதுமாக கண்டுபிடிப்பதற்காக ஜேசிபி இயந்திரம் உடனடியாக கொண்டு வரப்பட்டு தோண்டப்பட்டது. பிஎஸ்எப் ஐஜி ஜம்வால், அந்த இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தார்.
அந்த சுரங்கத்தில் இருந்த மணல் மூட்டைகளில் கராச்சி மற்றும் ஷகர்கார்க் என எழுதப்பட்டிருந்தது. அதில் உள்ள தேதிகள் மூலம் அந்த மூட்டைகள் சமீபத்தில் தான் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சுரங்கம் அருகே 700 மீ., தூரத்தில் பாகிஸ்தான் எல்லையில் குல்ஜார் செக் போஸ்ட் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.